திங்கள், 11 ஏப்ரல், 2011

கொ.மு.க.

கொ.மு.க. -வை. தோற்கடிப்போம் .





























கொ.மு .க -வை தோற்கடிப்போம்

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

அண்ணா பல்கலைக் கழக மாணவி ஜோதி தற்கொலை

ஆதித்தமிழர் பேரவையினர் அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பொழுது போலீசார் தடுத்து உருவபொம்மையை பறித்தனர்

திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில் அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கொடும்பாவி எரிக்க ஆதிதமிழர் பேரவையினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் படித்து வந்த ராசிபுரம், முள்ளுக்குறிச்சி மாணவி ஜோதி. கடந்த 31 ம் தேதி விடுமுறையில் வீட்டிற்கு வந்த இவர் 4 ம் தேதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இவர் ராகிங் கொடுமையால் தான் தற்கொலை செய்து கொண்டார் என மாணவி ஜோதி தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் ஜோதி விவகாரத்தில் தவறான தகவல்களைக் கூறுவதாகக் கூறி ஆதித் தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் வேங்கை மார்பன் தலைமையில் அந்த அமைப்பினைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்டில் மன்னர் ஜவகர் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாய்ந்து சென்று உருவபொம்மையை பறித்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆதித்தமிழர் பேரவையினர் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தின் பொழுது தவறான தகவல்களை பரப்பி வரும் துணைவேந்தர் மன்னர் ஜவகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவி ஜோதி சாவுக்கு காரணமான மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். டிஎஸ்பி ராஜசேகர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.




நாமக்கல், செப். 9: அண்ணா பல்கலைக் கழக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவை மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் நாமக்கல்லில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

÷நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் முள்ளுக்குறிச்சியைச் சேர்ந்த ஜோதி (18), சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ஜோதி கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

ராகிங் கொடுமை காரணமாகவே மாணவி உயிரிழந்திருப்பதாகவும், இதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ராகிங் நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், உயிரிழந்த ஜோதி குடும்பத்துக்குரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆதித் தமிழர் பேரவை சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் க. வேங்கை மார்பன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் நீலவேந்தன், அமைப்புச் செயலர் இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

÷இதேபோல், மாணவியின் தற்கொலைக்கு நீதி வழங்கக் கோரியும், குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குதல் உளளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலர் ஏ.டி. கண்ணன் தலைமை வகித்தார். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.










சாதிஒழிப்பு போராளி தளபதி ஐயப்பன் மரணம்

சாதிஒழிப்பு போராளி தளபதி ஐயப்பன் மரணம்






அருந்ததிய சமூக மாற்றத்திக்கு நீ விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்












சாதிஒழிப்பு போராளி தளபதி ஐயப்பன்













திங்கள், 26 அக்டோபர், 2009

அருந்ததியர் இனத்தில் பிறந்தது பாவமா?-பட்டதாரி வாலிபரின் பரிதாப நிலை


சாதி ஒழிக்கப்படும் வரை............தாழ்த்தப்ப்ட்ட தமிழ்ச் சகோதரர்கள் இப்படித்தான் பாதிக்கப்படுவார்கள்
மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம் வடிவேல்கரை. இந்த பஞ்சாயத்துக்குத்தான் மத்திய அரசு சமீபத்தில் ‘நிர்மல் புரஸ்கார்’ விருது வழங்கியிருக்கிறது. அந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர் அம்மாசி. இவர்தான் அந்த ஊருக்குத் துப்புரவுப் பணியாளர். குப்பைகளை இவர் கூட்டி, பெருக்கியதால் சுத்தமான கிராமம் என்ற பெருமை கிடைத்தது. அதற்கு நிர்மல் புரஸ்கார் விருதும் கிடைத்தது.

வடிவேல்கரையில் பிள்ளைமார், கள்ளர் சமூகத்தினர்தான் அதிகம். அங்கு அருந்ததியர் இன மக்கள் எழுபத்தைந்து குடும்பங்கள்தான் வசிக்கின்றன. அருந்ததியர் மக்களில் யாரும் படிக்காத நிலையில் தப்பித் தவறி துப்புரவுப் பணியாளரான அம்மாசி, தன் மகன் முருகனை லிட்டில் டிரஸ்ட் உதவியோடு எம்.காம். படிக்க வைத்தார். தற்போது தனியார் கல்லூரியில் பி.எட். படித்துக்கொண்டிருக்கும் முருகன்தான் இப்போது இந்தக் கிராமத்தின் ஹாட்டான டாபிக். முருகனை படிக்க விடக் கூடாது என்று ஊரே கூடி, அவரது படிப்புக்கு மூடு விழா காண திட்டமிட்டிருக்கிறது என்று மற்ற சாதி மக்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் அருந்ததியர் இன மக்கள். இந்த நிலையில் முருகன் தாக்குதலுக்கு உள்ளானார் என்ற செய்தியும் கிடைத்தது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தலையில் பதிமூன்று தையல்களோடு தரையில் படுத்திருந்த முருகனை சந்திக்க முடிந்தது. ஆறுதல் கூறிவிட்டு பேசத்தொடங்கினோம். ஈனஸ்வரத்தில் முருகனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.
“ஊர்ல எங்க அருந்ததியர் சமூகத்தில் நான் மட்டும்தான் எம்.காம். படித்து முடித்து, பி.எட். படிச்சுக்கிட்டு இருக்கேன். நான் ப்ளஸ் டூ படிக்கும் போதே முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ராமநாதன், ‘உனக்கு வேலை போட்டு தர்றேன் படிப்பை நிறுத்திரு’ன்னு சொன்னாரு. நான் கேட்கலை. காலையில வீடு வீடா நியூஸ் பேப்பர் போடுவேன். அதுக்கப்புறம்தான் காலேஜுக்குப் போவேன். இரவு எங்க பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பேன். இதுதான் மற்ற சாதிக்காரர்களுக்குப் பிடிக்கலை.
நாங்க, எங்க காலனி வீட்டுக்குப் போகணும்னா ஒண்ணு கம்மாய்கரை வழியா வரணும். இல்லாட்டி ஊர் மந்தை வழியா வரணும். இப்ப ரிங்ரோடு போடுறதுனால கண்மாய்க் கரை வழி அடைபட்டுப் போச்சு. ஊர் மந்தை வழியாத்தான் வரணும். அப்படித்தான் நான், ஆகஸ்ட் 13-ம் தேதியன்னிக்கு எங்க வீட்டுக்கு மந்தை வழியா சைக்கிள்ல போனேன். மந்தையில் கூடி நின்ற மற்ற சாதிப் பசங்க என்னை வழிமறிச்சு, ‘உனக்கு எத்தனை தடவை சொல்லுறதுடா. இறங்கி உருட்டிக்கிட்டு போ’னு சொல்லி, தள்ளி விட்டதோட, ‘படிச்சத் திமிறான்னு சொல்லி’ கடக்கால் கட்டுறதுக்குப் பயன்படும் கட்டுக்கல்லை தூக்கி ஆனந்த்ங்கிற பையன் என் தலையில போட்டுட்டான்.
மண்டை உடைஞ்சு ரத்தம் ஆறு மாதிரி ஓடுது. ஊரே நின்னு வேடிக்கை பாத்துச்சு. என்னன்னு கேட்க நாதியில்ல. ரத்தம் வழிஞ்சி ஓடுறதைப் பார்த்து பயந்துபோன ஆனந்த், சிலம்பரசன், லட்சுமணன் மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க. நானும் எங்க அப்பாவும் அடிச்சோம்னு சொல்லி அவனுங்களே ரத்த காயத்தை ஏற்படுத்திக்கிட்டு போய் புகார் கொடுத்தாங்க. சம்பவம் நடந்து நான்கு மணி நேரம் கழிச்சுத்தான் எனக்கே சுயநினைவு வந்தது. அதன் பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன்.
நாகமலை புதுக்கோட்டை போலீஸ் என் மேலேயும் எங்க அப்பா மேலேயும் கொலை முயற்சி வழக்கு பதிவு பண்ணிட்டதாச் சொல்றாங்க. என்னையும் அப்பாவையும் கைது பண்ணச் சொல்லி சில அரசியல் கட்சிகள் பிரஷர் கொடுக்கறதாவும் சொல்றாங்க.
சுதந்திர இந்தியாவில் நான் தலித் என்பதற்காக கஷ்டங்களை அனுபவிக்கிறேன். எப்படியாவது என்னை படிக்க விடக்கூடாது என்பது தான் அந்த மக்களோட எண்ணம். நான் டியூஷன் எடுத்து எங்க காலனியில் இப்பத்தான் அஞ்சு பேர் பத்தாவது படிக்கிறாங்க. நாங்க இன்னமும் செருப்புப் போட்டுக்கிட்டு ஊருக்குள்ள போகக் கூடாது. சைக்கிள் ஓட்டிக்கிட்டு போகக் கூடாது. டீக்கடையில் இரட்டை டம்ளர் இருக்கு. தமிழ்நாட்டில் சாதி என்ற ஆயுதத்தால், தமிழனுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டால், மற்ற நாடுகளில் மட்டும் தமிழனுக்கு உரிமை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?” என்று அழுதுகொண்டே கேட்டார் முருகன். முருகனின் அருகில் இருந்த பாண்டி ரொம்பவே ஆவேசப்பட்டார். “முருகனை அடிச்ச அடுத்த நாள் காலையில் 8.10 மணிக்கு பஸ் வந்தது. அதுலதான் வேலைக்குப் போறவுங்க, பள்ளிக்கூடம் போறவுங்க எல்லாம் போவோம். எங்க மக்கள் எல்லாத்தையும் கீழே இறக்கி விட்டுட்டு மற்ற சாதிக்காரங்க மட்டும் பஸ்ல போனாங்க. நாங்க மூணு கிலோமீட்டர் நடந்து போயி நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்று பிறகு பஸ் பிடிச்சுப் போனோம்.
எங்க உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்ல. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சரியானபடி நடவடிக்கை எடுக்கலைன்னா ஊரை காலி செஞ்சு, முதல்வர் வீடு முன்னாடி எங்களுக்குச் சுதந்திரம் வேணும்னு போராட்டம் நடத்தப் போறோம்” என்றார் பாண்டி படபடப்போடு.
லிட்டில் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி பர்வதாவர்த்தினி நம்மிடம், “அருந்ததியர் சமூகம் படிக்கக் கூடாது என்பதுதான் வடிவேல்கரை ஊர் மக்களின் நோக்கம். முருகன் படிப்பை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். அவனும் நம்ம ஊர் வேலைக்காரனாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஊர் மந்தை வழியாக சைக்கிளில் சென்ற முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அப்பதான் மற்ற அருந்ததியர் இன மக்களுக்கும் பயம் வரும்னு இப்படிச் செய்யறாங்க. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இப்படியொரு கொடுமை நடக்குது. அரசாங்கம் என்ன செய்யப் போகிறது. ஆதிக்கச் சாதியினர் ஊர்ல தலைகட்டு வரி போட்டு இந்த கேஸ்ல, அருந்ததியினர் ஜெயிக்கக் கூடாதுன்னு ஒன்றரை லட்ச ரூபாய் வரை பணம் திரட்டியிருக்காங்க.
ஊர் மந்தையில் வைத்து இவ்வளவு பெரிய கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ‘போலீஸார் அவர்களுக்குள் குடும்பச் சண்டை’ என்று சொல்லுகிறார்கள். ஒரு தனி மனிதனோட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அந்த ஊரில் முற்றிலும் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை” என்கிறார் அந்தச் சமூக சேவகி.
வடிவேல்கரை பஞ்சாயத்துத் தலைவர் ஆறுமுகத்திடம் பேசினோம். “நாங்க யாரையும் சைக்கிள்ல போகக்கூடாது, செருப்புப் போடக் கூடாதுன்னு சொன்னதே கிடையாது. எங்க ஊர் அமைதியான ஊர். நாங்க சாதி வேற்றுமையில்லாம தாயா பிள்ளையாத்தான் ஒற்றுமையா இருக்கோம். முருகன் குடும்பம்தான் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை வியாபார நோக்கத்தோட பயன்படுத்துறாங்க. எப்பப் பார்த்தாலும் எங்களை மிரட்டுறதுதான் அவங்களுக்குத் தொழில். இதுவரைக்கும் நாலு பி.சி.ஆர். கேஸ் கொடுத்து, முதல் கேஸ்ல நிவாரணம் பணம் வாங்கியிருக்கு அந்தக் குடும்பம். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னுதான் கலெக்டர்கிட்டே சொல்லி ‘அமைதி’கமிட்டி போடச் சொல்லியிருக்கேன். தனிப்பட்ட பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றப் பார்க்கிறார்கள். யாரு தப்பு செஞ்சாலும் தப்பு, தப்புதான். ரெண்டு பேரும் தனிப்பட்ட பிரச்னைக்கு மல்லுக்கட்டி புரண்டிருக்கானுங்க. போலீஸ் நேரடியாக வந்து விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்க” என விளக்கம் கொடுத்தார் ஆறுமுகம்.

திங்கள், 5 அக்டோபர், 2009


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுநாளில் சூளுரைப்போம்!



இந்திய பாசிச அரசின் சதியால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்.

 முதலாளித்துவ வெறி கொண்ட ஏகாதிபத்திய நாடுகளால் சிதைக்கப்பட்ட தமிழீழ நாட்டை மீட்டெடுப்போம்.

 சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை எதிர்ப்போம்.

 ஈழ விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

 மாவீரர்களின் கனவுகளை நனவாக்க தமிழீழ தேசிய விடுதலைப் போருக்குத் துணை நிற்போம்.

 வல்லரசுகளின் சதிகளை முறியடித்து இந்திய – சிங்கள அரசுகளிடமிருந்து தமிழகத்தையும் – தமிழீழத்தையும் மீட்டெடுப்போம்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

தோழர் தமிழரசனின் நினைவுநாளில் சூளுரைப்போம்!
தோழர்களே!

சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!

தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு.

கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார்.

இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சாரும் மஜும்தாரின் அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ML இயக்கத்தின் மாபெரும் முன்னோடி AMK என்கிற கோதண்டராமன் அவர்களுடன் இணைந்து ”மக்கள் போர்க்குழு” உறுப்பினராகப் பணியாற்றினார்.

1975-ல் அரசு இவரை அரியலூரில் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து தப்ப முயன்று பிடிபட்டார். பலமுறை முயன்று ஒவ்வொரு முறையும் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.

1984-ல் 9 ஆண்டு சிறை வாழ்வை முடித்துக் கொண்டு வெளிவந்த அவர் மீண்டும் AMK (எ) கோதண்டராமனுடன் தொடர்பு கொண்டார். அவருடன் இந்திய விடுதலையிலிருந்து தமிழக விடுதலை குறித்து தொடர்ந்து விவாதித்து வந்தார்.

1984-ல் மே மாதம் 5-6ம் தேதிகளில் கட்சி ஒரு மாநாடு ஏற்பாடு செய்தது. ”இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை” மற்றும் ”தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு” எனும் தலைப்பில் மாநாடு பென்னாடத்தில் நடந்தது.

மாநாட்டுக்குப் பின் ML அமைப்பிலிருந்து தமிழ்நாடு கிளை அமைப்பினர் வெளியேற்றப்பட்டனர். திருச்சி – தென்னார்காடு உள்ளிட்ட சில மாவட்ட ML தோழர்கள் 64 பேர் கொல்லிமலையில் கூடினர். அக்கூட்டத்தில் தாங்கள் இனி தனித்து இயங்குவது என முடிவு செய்தனர். கூட்டத்திற்கான அனைத்து முன்முயற்சிகளையும் தமிழரசன், சுந்தரம், புதுவை தமிழ்ச்செல்வம், தர்மலிங்கம் போன்றோர் செய்தனர்.

இப்படியாக ML இயக்கத்திற்குள்ளான கருத்து மோதல்களை அமைப்பு வடிவில் பிளவு படுத்திய முதல் தோழர் தமிழரசனே.

1985-ல் பெரம்பூர் மாவட்டம் மீன்சுருட்டியில் ”தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்” நடத்திய கருத்தரங்கில் ”சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்” எனும் பொருள்பட ஓர் அறிக்கையை தமிழரசன் முன்வைத்தார்.

டெல்லியில் நடந்த அகில இந்திய அளவிலான ML குழுக்களின் ஓர் கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து தோழர் புதுவை தமிழ்ச்செல்வன், புலவர் கலியபெருமாள் இருவரும் கலந்து கொண்டு தாங்கள் ”தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி” என பங்கு கொண்டனர்.

தமிழரசன் ”தமிழ்நாடு விடுதலைப் படை” எனும் பெயரில் இயக்கம் கட்டி இயங்கத் தொடங்கினார். சாதி ஒழிப்பிற்கான தேவை குறித்தும் தமிழக விடுதலை குறித்தும் தமிழகம் முழுக்கச் சுற்றி பல்வேறு தோழர்களையும், தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.

தமிழக விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கும் ஆயுதமேந்தும் அரசியல் குறித்து கருத்துப் பரப்புரையும், செயல் திட்டங்களையும் வகுத்துச் செயல்பட்டார். புதிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் சாதி ஒழிப்பு ஒரு முகாமையான பங்கை வகிக்கின்றது என்பதை முன்வைத்து செயலாற்றினார்.

பல்வேறு போராட்டங்களை கருவியேந்துதல் வழி செயல்படுத்திய தமிழரசன் தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி ஆற்று நீர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டி ஒரு திட்டம் தீட்டினார்.

அதை செயல்படுத்த தேவைப்படும் பொருளியல் ஈட்டல் நடவடிக்கை மேற்கொண்டபோது பொன்பரப்பியில் உளவுத்துறையின் சதியால் காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டார். தமிழரசனுடன் தர்மலிங்ம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் போன்ற தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைமைக் குழுவினர் ஐந்து பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இவரது இறப்பிற்குப் பின் தோழர் பொழிலன் உள்ளிட்ட சில தோழர்கள் தமிழ்நாடு விடுதலைப் படை என மீண்டும் செயல்பட்டனர்.

இதனால் கொல்லிமலை கூட்டத்தில் பிரிந்து சென்ற தோழர் சுந்தரம் ”தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி” எனும் பெயரில் செயல்பட ஆரம்பித்தார்.

தமிழக மக்கள் விடுதலைக்கான போரில் தனது உயிரை ஈந்த தமிழரசன் உள்ளிட்ட தோழர்களின் நினைவு நாளான இன்று அவர்களது முகாமைக் குறிக்கோளான சாதியொழிப்பை நெஞ்சிலேந்திப் போராட அனைவரும் சூளுரைப்போம்!

தோழர்களே

சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!
தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

நவீன தீண்டாமை ..... தீர்வு ?



நவீன தீண்டாமை கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், பாப்பான்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சாளரப்பட்டி கிராமத்தில் சுமார் 70 தாழ்த்தப்பட்ட அருந்ததியர் குடும்பங்களும், சுமார் 600-க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் குடும்பங்களும் வாழ்ந்து வருகிறார்கள். இக்கிராமத்தில் சாதி இந்துக்களால் நடத்தப்படும் 11 தேநீர் கடைகளிலும் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை நீக்கி, தேநீர் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆதித்தமிழர் பேரவையின் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் அருந்ததியன் குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகார் மனு ஏற்புச் சான்று எண் 16/2008. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசியுள்ளனர். இதனிடையே சாதி இந்துக்கள் 11 தேநீர் கடைகளையும் அடைத்து எதிர்த்துள்ளனர். தினமும் மூடியிருப்பதால் வருமானம் பாதிக்கிறது என்பதால் கடந்த 14-ஆம் தேதி இரண்டு தேநீர் கடைக்காரர்கள் கடையை திறந்துள்ளனர். பிற தேநீர் கடைக்காரர்களும், சாதி இந்துக்களும் சேர்ந்து, அந்த இரண்டு கடைகளையும் அடித்து உடைத்துள்ளனர்.
அதே நேரத்தில், உடுமலைப்பேட்டையில் ஆர்பாட்டத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர் அருந்ததியர்கள். இந்நிலையில் ஊர்த்தெருவில் உள்ள சின்னான்டவர் கோயிலில் தலித்துகள் நுழையப்போவதாக பொய்ப்பிரச்சாரம் செய்து, ஊரில் உள்ள பிற சாதி இந்துக்களையும் அழைத்துக்கொண்டு தலித் குடியிருப்பிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், வயதானவர் என அனைவரையும் தாக்கி, அடித்துக் காயப்படுத்தி உள்ளனர். இரண்டு வீட்டருகில் தீ வைத்தும் எரித்துள்ளனர். சாதி இந்துக்களின் தாக்குதலில் காயமடைந்த சுமார் 18 தலித்துகள் உடுமலை, கோவை, திருப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சப் பெற்று வருகிறார்கள்மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரித்ததில் கீழ்கண்டவைகளை அறியமுடிந்தது.

உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும், மேற்படி சாளரப்பட்டி கிராமத்திலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் உள்ளது என்பதையும், தலித் மக்களுக்கு தனி குவளையில் தேநீர் தரப்படுகிறது என்பதையும், தேநீரை வெளியில் நின்றுகொண்டோ அல்லது தரையில் அமர்ந்துகொண்டோ குடிக்கின்ற நிலை உள்ளது என்பதையும், மேற்படி 11 தேநீர் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இரட்டை டம்ளர் முறையை தடுக்கக்கோரி, ஆதித்தமிழர் பேரைவயின் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் அருந்ததியன் கடந்த 07.02.08 அன்று குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார், ரசீது எண் 16/2008 என்பதையும் கண்டறிய முடிந்தது.புகாரைப்பெற்ற குமரலிங்கம் காவல் நிலைய ஆய்வாளர் பழனிமுத்து, தேநீர் கடைக்காரர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி, கடைகளில் இனி அனைவருக்கும் ஒரே மாதிரியான தம்ளரில் தேநீர் கொடுக்குமாறு பேசியுள்ளார்.சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த தேநீர் கடைக்காரர்கள் இந்த முடிவை ஏற்காமல் 11 தேநீர் கடைகளையும் அடைத்து எதிர்த்துள்ளனர். வருமானம் போகின்றதே என கிருஷ்ணசாமி செட்டியார், கருணாநிதி செட்டியார் ஆகிய இருவரும் கடந்த 14.02.08 அன்று தங்களது தேநீர் கடைகளை திறந்துள்ளார்கள் என்பதையும், பிற தேநீர் கடைக்காரர்களும், ஊரின் சாதி இந்துக்களும் சேர்ந்து, ஊர்க் கட்டுமானத்தை மீறி எப்படி கடையைத் திறக்கலாம் எனக்கூறி இரண்டு தேநீர் கடைகளுக்குள்ளும் புகுந்து கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்துள்ளனர்.


தகவலறிந்த போலீசார் கிராமத்திற்கு வந்துள்ளனர். பின்பு வட்டாட்சியர் சந்திரபோசு ஊர் மக்கள் அனைவரையும் மறுநாள் 15.02.08 அன்று குமரலிங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பில் இருக்கும் படியும், தேநீர் கடைகளில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தும் படியும் பேசியுள்ளார். ஆனால் தேநீர் கடைக்காரர்கள் வட்டாட்சியரின் இந்த அறிவுறுத்தலையும் ஏற்காமல் எதிர்த்துள்ளனர். தொடர்ந்து தேநீர் கடைகளை அடைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் உடுமலைப்பேட்டையில், கடந்த 07.02.08 அன்று மேற்படி அருந்ததியன் கொடுத்த புகாரின்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்பாட்டத்தை முடித்துவிட்டு ஆதித்தழிழர் பேரவையைச் சேர்ந்த சாளரப்பட்டி பூபதி, கோட்டமங்கலம் வீராச்சாமி ஆகிய இருவரும் டி.வி.எஸ்.சுசுகி வண்டியில் சாளரப்பட்டி சென்றுள்ளனர். அங்கிருந்த அருந்ததியர் மக்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீராச்சாமி கிளம்பியுள்ளார். அப்போது அவருடன் முருகன் என்பவரும் வண்டியில் சென்றுள்ளார்.

மேற்படி வீராச்சாமி, முருகன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊர்த்தெரு வழியாக செல்லும்போது, சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த கனகராஜ் த/பெ முத்துசாமி கவுன்டர், மாரிமுத்து த/பெ வேலுச்சாமி, வேலுக்கண்ணன் த/பெ சின்னசாமி, வெள்ளியங்கிரி த/பெ முருகேசன், மயில்சாமி த/பெ பழனி கவுண்டர் உள்ளிட்ட சுமார் 25 பேர் மேற்படி வீராச்சாமி, முருகன் ஆகிய இருவரையும் வழி மறித்து கையில் வைத்திருந்த தடி, அருவாள், கத்தி, வண்டிப்பட்டா போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். ‘‘எங்களை எதிர்த்து ஆர்பாட்டம் செஞ்சிட்டு, சக்கிலி தாயாலிங்களா இங்க எங்க ஊருக்கு வர்ரீங்களா’’ என்றும், ‘‘நீங்கதான் இங்க வந்து இங்க இருக்கிற சக்கிலியன்கள தூண்டி விடுறீங்களா’’ என்றும் மிரட்டியுள்ளனர். இவ்வாறு தாக்கபட்டதில் மேற்படி வீராச்சாமிக்கு மூக்கிலும், மார்பிலும் கடுமையாக அடிப்பட்டுள்ளார்.
ஊர்த்தெருவில் மேற்படி வீராச்சாமியை அடித்த சாதி இந்துக்கள், சுமார் 200&க்கும் மேற்பட்டோர் அருந்ததியர் குடியிருப்பிற்குள் புகுந்து வீடுகளையும், கண்ணில் பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். சாதி இந்துக்களின் தாக்குதலில் அருந்ததியர் மக்களின் 16 வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கடுமையாக காயமடைந்து உடுமலைபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இரண்டு வீடுகளில் துணிகளையும், ஓலைகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். சாதி இந்துக்களின் தாக்குதலில் காயமடைந்த மேற்படி வீராச்சாமி, நடந்த சம்பவம் தொடர்பாக குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். கா.நி.கு.எண் 24/08 பிரிவுகள் 147,148,341,324,307 இதச உடன் 3(1)(x) எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்ய்துள்ளனர். அருந்ததியர்கள் குடியிருப்பிற்குள் புகுந்து சாதி இந்துக்கள் தாக்கியது தொடர்பாக மாரானி த/பெ திருமால் என்பவர் தந்த புகாரின் பேரில் கா.நி.கு.எண் 26/08 பிரிவுகள் 147,148, 324,307 இதச உடன் 3(1)(x) எஸ்.சி/எஸ்.டி சட்டம் ஆகியவற்றின் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 14&ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்திலிருந்து போலீசார் பாதுகாப்பிற்கு கிராமத்தில் இருந்து வருகிறார்கள்.

ஆனால் சாதி இந்துக்கள் அருந்ததியர் குடியிருப்பிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி முடிக்கும் வரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சாதி இந்துக்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார்கள். சாதி இந்துக்களின் தாக்குதலில் காயமடைந்த தலித் மக்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதையும், அடிபட்டு வந்தபோது முதலுதவி செய்து உடனே அனுப்பும் முயற்சி நடந்துள்ளது என்பதையும், அதன்பின்பு கடுமையான வற்புறுத்தலுக்கு பின்புதான் உள்ளிருப்பு நோயாளியாக வைத்து சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளார்கள் என்பதையும் அறிய முடிந்தது.
இரட்டை டம்ளர் முறையை நீக்கக் கோரி காவல் நிலையத்தில் கொடுத்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அருந்ததியர்கள் மக்களையும், அவர்களது வீடுகளையும் அடித்து உடைத்த சாதி இந்துக்கள், ‘‘அருந்ததியர்கள் சின்னான்டவர் கோயில் பூட்டை உடைத்து நுழைய முயன்றார்கள். தடுத்தத்ற்காக எங்களைத் தாக்கினார்கள்’’ என்று அப்பாவி தலித்துகள் மீது பொய்புகார் கொடுத்து, பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாதி இந்துக்களால் மீண்டும் தாக்கப்படலாம், அல்லது தொடர்ந்து தாக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக பல அருந்தியர் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
பள்ளியில் பயிலும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 70 மாணவ, மாணவிகள், சாதி இந்து மாணவர்களால் தாக்கப்படலாம் என்பதால் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதையும், கடந்த 18.02.07 அன்று அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை சாதி இந்து மாணவர்கள் தாக்கியுள்ளனர் என்பதையும், நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடியில் சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மட்டுமே வந்திருந்தனர் என்பதையும் அறிந்தோம்.
மேற்படி நடுநிலைப்பள்ளியில் பயில்கின்ற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மதிய சத்துணவு சாப்பாட்டை, வகுப்பறைகளின் வெளி வராண்டாவில் அமர்ந்துதான் சாப்பிடுகிறார்கள். அனைவரும் அங்குதான் செருப்புகளை விட்டு வைக்கின்றார்கள். அந்த செருப்புகளின் அருகில் அமர்ந்துதான் தலித் மாணவர்கள் சாப்பிடுகிறார்கள். சாதி இந்து மாணவர்கள் வகுப்பறைகளின் உள்ளே வசதியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.

கடந்த 20.02.08 அன்று மேற்படி கிராமத்தைப் பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சியர் திரு. நீரஜ் மித்தல் அவர்கள், பாதிக்கப்பட்ட தலித் குடியிருப்பை சில நிமிடங்கள் மட்டும் பார்வையிட்டு, தங்கள் குறைகளை முறையிட வந்த தலித் மக்களிடம் ஓரிரு நிமிடங்கள் மட்டும் பேசி, தொடர்ந்து மக்கள் பேசுவதற்குள் கிளம்பி, சாதி இந்துக்களின் பகுதிக்கு சென்று, அங்கங்கே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சாதி இந்துக்களை அவராகவே அழைத்து பேசத்தொடங்கினார். அப்போது சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், ‘‘இனிமேல் டீ கடைகளில் அவங்களூக்கு(தலித் மக்களுக்கு) பிளாஸ்டிக் டம்ளரில் டீ தருகிறோம். சின்னான்டவர் கோயிலுக்குள் விடமுடியாது. சமுதாயக்கூடத்தில் வருவதற்கு வேண்டுமானால் ஊர்க்கூட்டம் போட்டு பேசிவிட்டு சொல்கிறோம்’’ என்று தாங்களே முன்வந்து தலித் மக்கள் மீது காட்டிவரும் சாதியப் பாகுபாட்டை ஒத்துக்கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அவர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள், அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், மனித உரிமை அமைப்பினர் ஆகியோர் உடனிருந்தனர்.
இனியேனும் அரசு... இவைகளைச் செய்யுமா? தமிழக அரசின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உள்ள காவல் அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேநீர் கடைகளில் டிஸ்போசல் கப் என்கிற ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிற பிளாஸ்டி டம்ளரில் தேநீர் குடிக்க வைத்து, புகைப்படம் எடுத்து, இரட்டை டம்ளர் முறை இல்லை என பத்திரிக்கைளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேற்படி சாளரப்பட்டி கிராமத்தில் இருந்த இரட்டை டம்ளர் முறையை தடுத்து நிறுத்தவேண்டும் என தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்கள் புகார் கொடுத்ததால், சாதி இந்துக்களால் மிகப்பெரிய வன்கொடுமைக்கு ஆளாக நேரிட்டது. எனவே, தமிழ அரசு உடனடியாக இரட்டை டம்ளர் முறை மூலம் தலித் மக்கள் மீது நிகழ்கின்ற தீண்டாமை வன்கொடுமையினை தடுத்து நிறுத்த புதிய சட்டம் இயற்றி, உடனடியாக அதை நடைமுறைப் படுத்த வேண்டும். மேற்படி இரட்டை டம்ளர் முறையை தடுக்க டிஸ்போசல் கப் என்கிற ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிற பிளாஸ்டி டம்ளரில் தேநீர் கொடுத்து நவீன தீண்டாமை நிகழ்ந்து வருகிறது. அரசு தனிக்கவனம் செலுத்தி இந்த நவீன தீண்டாமையை தடுத்து நிறுத்தவேண்டும். மேலும் அவ்வாறு பிளாஸ்டிக் டம்ளரில் தேநீர் தரும் கடைக்காரர்கள் மீது சுற்றுச்சூழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.